மருமகள் - மாமியர் மாறி மாறி உணவு ஊட்டிவிடும் போட்டி.. ஈரோடு உணவகத்தின் அசத்தல் முயற்சி!

 

ஈரோட்டை சேர்ந்த தனியார் உணவகம் ஒன்று அறிவித்திருந்த போட்டி பல்வேறு தரப்பினர் இடையேயும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாமியார் மற்றும் மருமகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்தும் வகையில், ஈரோட்டை சேர்ந்த வேதாஸ் என்ற உணவகத்தின் உரிமையாளர் பூபதி போட்டி ஒன்றை அறிவித்தார். அதன்படி மாமியாரும் மருமகளும் ஒருவருக்கொருவர் தாங்கள் ஆர்டர் செய்யும் உணவுகளை முழுவதுமாக ஊட்டி விட்டால், உணவு இலவசம் என்று அறிவிப்பை வெளியிட்டார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக அவர் இந்த போட்டியை அறிவித்து நடத்தி வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த போட்டி அறிவிக்கப்படுகிறது. இதில் ஈரோடு மட்டுமன்றி அருகாமை மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான மாமியார் மருமகள்கள் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் உணவு ஊட்டி மகிழ்கின்றனர்.

அந்த வகையில் இந்த ஆண்டும் உணவகத்தில் போட்டி அறிவிக்கப்பட்டு இருந்தது. ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாமியார் - மருமகள் ஜோடிகள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். அப்போது ஒருவருக்கொருவர் உணவு வகைகளை பாசத்துடன் ஊட்டி விட்டு மகிழ்ந்தனர்.

இந்த போட்டியின் முடிவில் வெற்றி என்பது மாமியார் மருமகளுக்கு இடையேயான உறவு மட்டுமல்ல. உணவு வீணாக்கப்படக்கூடாது என்பதும் இதன் நோக்கமாகும். போட்டியின் முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு இரு விதை பந்துகளையும் இந்த உணவகம் சார்பில் வழங்கி வருவது மேலும் சிறப்பான அம்சமாகும்.