பப்பில் நடனமாடிய கல்லூரி மாணவர் மயங்கி விழுந்து பலி.. தோழிகள் கண்முன்னே நடந்த சோகம்!

 

நுங்கம்பாக்கத்தில் உள்ள பப்பில் நடனமாடிக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியைச் சேர்ந்தவர் முகமது சுகைல் (22). இவர் சென்னை ராமாபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்பிஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 15 நாட்களுக்கு முன்னர் தான் சொந்த ஊரில் இருந்து புறப்பட்டு படிப்பதற்காக இந்த கல்லூரிக்கு வந்துள்ளார். மேலும், இவர் அதேபகுதியில் உள்ள பிஜி ஹாஸ்டலில் தங்கி படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் தனது தோழிகள் சிலருடன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கேளிக்கை விடுதியில் உள்ள பப்பிற்கு சென்றுள்ளார். அப்போது அவர் அங்கு உணவு சாப்பிட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவர் பப்பில் தனது தோழிகளுடன் நடமாடிக்கொண்டிருந்தார். நடனமாடிக்கொண்டிருந்த போதே திடீரென முகமது சுகைல் சுருண்டு கீழே விழுந்தார்.

முகமது சுகைல் மயக்கத்தில் கிழே விழுவதை பார்த்ததும் அவரது தோழிகள் பதறி போயினர். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு கல்லூரி மாணவரை பரிசோதித்த மருத்துவர்கள் முகமது சுகைல் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த தேனாம்பேட்டை போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து மாணவனின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதன் பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், நுங்கம்பாக்கத்தில் உள்ள பப்பானது கடந்த 2 ஆண்டுகளாக இயங்கி வருகிறது என்றும் ஒரு நபருக்கு 1,000 ரூபாய் வசூல் செய்யப்படுவதும் தெரியவந்துள்ளது.

எனினும் கல்லூரி மாணவர் மாரடைப்பு ஏற்பட்டு தான் உயிரிழந்தாரா? இல்லை வேறு ஏதேனும் உட்கொண்டு இறந்தாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில், கல்லூரி மாணவர் முகமது சுகைல் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கல்லூரி மாணவர் பப்பில் உயிரிழந்தத சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.