பள்ளி செல்ல பெற்றோர் வற்புறுத்தியதால் 9-ம் வகுப்பு மாணவர் தற்கொலை.. தென்காசியில் அதிர்ச்சி!

 

ஆலங்குளம் அருகே பள்ளிக்கு செல்ல பெற்றோர் வற்புறுத்தியதால் 9-ம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள உடையாம்புளி கிராமத்தைச் சோ்ந்தவர் பெருமாள். இவரது மகன் கண்ணன் (14). இவர், மாறாந்தை அரசுப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்த நிலையில், பள்ளி விடுமுறை நாள்களில் தன் தந்தையுடன் பந்தல் அமைக்கும் வேலைக்கு சென்று வந்தாா். 

இதனிடையே, கண்ணனின் தந்தை பெருமாளுக்கு வாதநோய் ஏற்பட்டதால் சில மாதங்களாக அவரது முழுப்பணியையும் கண்ணன் கவனித்து வந்தாராம். இந்நிலையில் இரு தினங்களாக பள்ளிக்குச் செல்லாமல் இருந்த அவரை, பள்ளிக்குச் செல்லுமாறு தந்தை கண்டித்ததாக கூறப்படுகிறது. 

இதனால் விரக்தியடைந்த கண்ணன், தந்தை திட்டிய ஆத்திரத்தில் தோட்டத்தில் விவசாயத்திற்கு பயன்படுத்த வைத்திருந்த பூச்சி மருந்தை அருந்தி நேற்று தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆலங்குளம் போலீசார் விசாரணை நடத்தினர்.

பின்னர், மாணவன் கண்ணனின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.