ஆற்றில் மூழ்கி 3-ம் வகுப்பு மாணவி பரிதாப பலி.. வேலூரில் பெரும் சோகம்!
வேலூர் அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற 3ம் வகுப்பு மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே கழனிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். டாஸ்மாக் கடை ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஷகிலா. இந்த தம்பதிக்கு இரு மகள்கள். இளைய மகள் திவ்யா (9) பசுமாத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் விடுமுறை நாளான நேற்று கார்த்திகேயனின் தம்பி சசிகுமார் தனது 2 மகள்களுடன் திவ்யா மற்றும் ஷகிலாவை கந்தனேரியில் உள்ள பாலாற்றுக்கு குளிப்பதற்காக அழைத்துச்சென்றார். மழை காரணமாக மணல் குவாரிக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் தண்ணீர் நிரம்பியிருந்ததால், அவர்களை கரையோரம் அமர வைத்துவிட்டு தண்ணீர் குறைவாக உள்ள பகுதியை பார்த்து வருவதாக சசிக்குமார் சென்றுள்ளார்.
அதற்குள் 4 சிறுமிகளும் ஆற்றுக்குள் இருந்த மணல் எடுக்க தோண்டிய சுமார் 10 அடி ஆழமுள்ள பள்ளத்தில் குளிப்பதற்காக இறங்கினர். அப்போது 4 பேரும் நீரில் மூழ்கி கூச்சலிட்டனர். உடனே அந்த பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டு இருந்த மணிமேகலை என்ற பெண் ஓடிச்சென்று 4 சிறுமிகளையும் காப்பாற்ற ஆற்றில் குதித்தார். அவர் 3 சிறுமிகளை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தார்.
அதற்குள் சசிகுமார் ஓடிவந்து பார்த்து திவ்யா எங்கே என்று கேட்டார். அதற்கு திவ்யா, ஆற்றில் உள்ளார் என்று கூறியவுடன் அங்கிருந்து ஓடி சென்று திவ்யாவை தேடினார். அப்போது திவ்யாவை 10 அடி ஆழத்தில் மயங்கிய நிலையில் மீட்டார். பின்னர் மருத்துவமனைகு அழைத்துச் செல்லப்பட்ட திவ்யாவுக்கு உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் மேல் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். அதற்குள் திவ்யா இறந்து விட்டாள்.
தகவல் அறிந்த பள்ளிகொண்டா போலீசார் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு சென்று டாக்டர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.