திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்த 2-ம் வகுப்பு சிறுவன்.. நடுங்க வைக்கும் காட்சி!

 

திருச்சி தனியார் பள்ளியில் திடீரென மயங்கி விழுந்து 2-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் செயின்ட் ஜேம்ஸ் மெட்ரிக் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இதில் திருச்சி மாநகர் பகுதியில் உள்ள ஏராளமான மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணிக்கு மாணவ, மாணவிகளுக்கு உடற்கல்வி வகுப்பு நடைபெற்றதாக தெரிகிறது. அப்போது மாணவர்கள் வகுப்பறையில் தங்களுக்குள் விளையாடி கொண்டிருந்த போது, 2-ம் வகுப்பு படித்து வந்த மாணவன் பிரின்ஸ் திடீரென பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்துள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியான சக மாணவர்கள் ஆசிரியரிடம் இதை தெரிவித்த நிலையில், ஆசிரியர்கள் உடனடியாக மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்த பின், அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.‌ அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

அதன் பின் மாணவனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் அருகில் உள்ள குழந்தை‌ இயேசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்த போது அவருக்கு ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்திருப்பது தெரியவந்தது. அதன் காரணமாக மாணவன் உயிரிழந்தாகவும், மாணவன் உயிரிழந்த சம்பவத்திற்கும், பள்ளி நிர்வாகத்தினருக்கும் எந்த தொடர்பும் இல்லை என பள்ளி நிர்வாகம் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.