பள்ளி வகுப்பறையில் 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை.. ராமநாதபுரம் அருகே சோகம்!

 
Kadaladi

கடலாடி அரசு பள்ளி வகுப்பறையில் 10-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் புனவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மகன் தீபக் (15). இவர் கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவன் தீபக் பள்ளி வகுப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Suicide

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடலாடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மாணவன் தீபக் இன்று வீட்டில் இருந்து பள்ளிக்கு காலை 8 மணிக்கு பள்ளிக்கு வந்துள்ளார்.

இதுகுறித்து தீபக்குடன் படிக்கும் மாணவர்களிடம் விசாரிக்கும் போது மாணவன் தீபக் கடந்த 10 நாட்கள் முன்பு வீட்டை விட்டு வெளியேறியதாகவும் அவரை கண்டுப்பிடித்து திருப்பி வீட்டில் சேர்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மாணவன் மற்றும் அவருடைய பெற்றோர்களுக்கிடையே மனஸ்தாபம் ஏற்பட்டதால், கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவன் தீபக் இன்று காலை வகுப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவரது உடல் கடலாடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.