சிஐஎஸ்எப் வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் விபரீதம்!

 

கோவை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பீளமேடு பகுதியில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் கோவை விமான நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை  (சிஐஎஸ்எப்) வீரரான ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சகர்தர் (34) என்பவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில், நேற்று காலை இவர் கோவை விமான நிலையத்தில் இருந்து பயணிகள் வெளியே வரும் வழியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அவரது கையில் பாதுகாப்புக்காக ஏகே 47 துப்பாக்கியை வைத்திருந்தார். திடீரென அவர் அங்கிருந்த கழிவறைக்கு சென்றார். சிறிது நேரத்தில் கழிவறையில் இருந்து துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது.

இதனால் விமான நிலையத்தில் இருந்த பயணிகள் அலறியடித்தப்படி ஓட்டம் பிடித்தனர். சத்தம் கேட்டு அங்கு வந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கழிவறையின் கதவை திறந்து பார்த்தனர். அப்போது சகர்தர் துப்பாக்கியால் தனக்கு தானே தலையில் சுட்டப்படி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதனைக்கண்ட மத்திய பாதுகாப்பு படையினர் அவரை மீட்டு, சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் கோவை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

முதல்கட்ட விசாரணையில் சகர்தர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த காரணத்தால், நீண்ட நாட்களாக மனம் உடைந்து காணப்பட்டுள்ளார். இதனால் அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.