முதலமைச்சரின் பீகார் பயணம்.. விஜய் தரப்பு சொல்ற மாதிரி எதுவுமே கிடையாது!!
தேர்தல் ஆணையத்தின் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகளையும், வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறப்படும் பிரச்சினைகளையும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ராகுல் காந்தி பீகார் மாநிலத்தில் வாக்காளர் உரிமை யாத்திரையை தொடங்கினார்.
ராகுல் காந்தியுடன் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவும் இந்த யாத்திரையில் பங்கேற்று வருகிறார். இருவரும் காரிலும் மோட்டார் சைக்கிளிலும் திறந்த வேனில் பேரணியாகச் சென்று பொதுக் கூட்டங்கள் நடத்தி வருகின்றனர். ராகுல் காந்தியின் இந்தப் பேரணி பீகாரில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 17 தொடங்கிய இந்த வாக்காளர் உரிமை யாத்திரை 16 நாட்களில் 1300 கிலோமீட்டர் தொலைவுக்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் செப்டம்பர் 1ம் தேதி நிறைவடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தப் பேரணியில் இந்தியா கூட்டணியைச் சார்ந்த தலைவர்களும், காங்கிரஸ் கட்சியின் தேசிய, மாநிலக் கட்சித்தலைவர்கள் முதலமைச்சர்களும் பங்கேற்று வருகின்றனர்.
அந்த வகையில் இந்தியா கூட்டணியின் முக்கியக் கட்சியான திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பீகார் சென்று பேரணியில் பங்கேற்று, பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். முதலமைச்சரின் பீகார் பயணத்தை பாஜகவினர் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர். இன்னொரு பக்கம் விஜய் தரப்பினர், தங்கள் கட்சியின் அதிரடி நடவடிக்கையால் ஆடிப்போன முதலமைச்சர் ஓடோடிச் சென்று ராகுல் காந்தியை சந்தித்துள்ளார் என்று கிளப்பி விடுகின்றனர்.
பொதுவாக இத்தகைய பேரணியின் கடைசி நாளில் பெரிய பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு அதில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பது வழக்கம். ராகுல் காந்தியின் முந்தைய பேரணியில் மும்பையில் இத்தகையக் கூட்டம் நடைபெற்றது. அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.
தற்போது முதலமைச்சரின் ஜெர்மனி, இங்கிலாந்து பயணங்கள் முடிவாகி வெளிநாடு செல்ல உள்ளதால், முன்னதாகவே பேரணியில் பங்கேற்று பொதுக்கூட்டத்திலும் பேசியுள்ளார். பேரணியின் கடைசி நாள் இந்தியாவில் இல்லை என்பதால் தான் முன்னதாகவே பீகார் சென்றுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்பது தெரிய வந்துள்ளது.
தன்னுடைய கட்சி சார்பில் யார் சென்றாலும், தானே நேரில் சென்றது போல் ஆகாது என்பதால் தான் பீகார் பயணத்தை மேற்கொண்டுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். வாக்காளர் உரிமை யாத்திரையின் கடைசி நாள் பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி உள்ளிட்ட திமுக முன்னணித் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றும் தெரிகிறது.
மற்றபடி விஜய் தரப்பின் 60 தொகுதிகள் ஆட்சியில் பங்கு, துணை முதலமைச்சர் போன்ற தூண்டில் வார்த்தைகளை எல்லாம் காது கொடுத்து கேட்பதற்குக் கூட ராகுல் காந்தி தயாராக இல்லை என்பதே உண்மை ஆகும்
- ஸ்கார்ப்பியன்