50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்.. 6 வயது சிறுவன் பரிதாப பலி!
ஊட்டி மலைப்பாதையில் 50 அடி பள்ளத்தில் கார் உருண்டு விபத்துக்குள்ளானதில் 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி ஜாகிர் நகர் பகுதியை சேர்ந்தவர் பைசன் அகமது (26). இவரது மனைவி சகானா (26). இந்த தம்பதிக்கு 6 வயதில் அகமது அலி மற்றும் இப்ராஹிம் என்ற 7 மாத குழந்தை உள்ளது. பைசன் அகமதுவின் உறவினரான தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஜர்னலிஸ்ட் காலனியை சேர்ந்தவர் முகமது அலி (26). இவருடைய மனைவி சனா (28).
இந்தநிலையில் பைசன் அகமது மற்றும் அவரது உறவினரான முகமது அலி ஆகியோர் குடும்பத்தினருடன் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். இதற்காக பைசன் அகமது தனது குடும்பத்தினருடன் ரயில் மூலம் ஐதராபாத் வந்தார். இதன் பின்னர் அங்கிருந்து முகமது அலியின் கார் மூலம் அனைவரும் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர்.
ஊட்டி உள்பட பல்வேறு இடங்களில் சுற்றுலா தளங்களை கண்டு ரசித்த அவர்கள், இறுதியாக நேற்று மசினகுடி சாலை வழியாக மைசூர் சென்று அதன் பின்னர் ஐதராபாத் செல்ல திட்டமிட்டு இருந்தனர். இந்த நிலையில் தலைக்குந்தா சந்திப்பில் இருந்து கல்லட்டி வழியாக செல்ல வெளி மாநில வாகன பதிவு எண் கொண்ட வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்பதால், ஊட்டியில் இருந்து புதுமந்து சாலை, காரபிள்ளு, உல்லத்தி வழியாக சென்று கல்லட்டி சாலையை அடைய முடிவு செய்தனர்.
காரை பைசன் அகமது ஓட்டி சென்றார். இதற்கிடையே கல்லட்டி சாலையை அடைவதற்கு சில கிலோ மீட்டர் தூரம் முன்பு உல்லத்தி பகுதியில் கார் கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் சுக்குநூறாக நொறுங்கி விட்டது. விபத்தில் சிக்கியவர்கள் வலி தாங்க முடியாமல் கூக்குரல் இட்டனர்.
அப்போது அந்த சாலையில் வந்த உல்லத்தி பகுதியை சேர்ந்த ஒருவர், இதை பார்த்து அருகில் இருந்த குடியிருப்புவாசிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதன் பேரில் பொதுமக்கள் மற்றும் புதுமந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கிய 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் 6 வயது சிறுவன் அகமது அலி வரும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இதே போல் 7 மாத குழந்தையான இப்ராகிம் தவிர மற்ற 4 பேரும் படுகாயம் அடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐதராபாத்தில் இருந்து கார் மூலம் வந்த பைசன் அகமது மற்றும் முகமது அலி குடும்பத்தினர் மசினகுடி சாலை வழியாக செல்ல திட்டமிட்டு இருந்தனர். இந்தப் பகுதியில் இருந்த சாலைகள் அவருக்கு சரிவர தெரியாது என்பதால், கூகுள் மேப்பை பயன்படுத்தி பைசன் அகமது கார் ஓட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் உள்ளத்தி பகுதியில் வளைவான சாலையில் கூகுள் மேப்பை கவனித்தவாறு வாகனம் ஓட்டும் போது கவனம் சிதறி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது தெரியவந்தது.