மரத்தில் கார் மோதி நிறைமாத கர்ப்பிணி பலி.. வயிற்றில் இருந்த குழந்தையும் உயிரிழந்த சோகம்!
 

 

கரூர் அருகே மரத்தில் கார் மோதி நிறைமாத கர்ப்பிணியும், வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை தாலுகா, வெள்ளைப்பாறை கிராமத்தை வசித்து வருபவர் சந்திரசேகர் (21). இவரது மனைவி நிகிதா (19). இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நிகிதாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உறவினர்கள் நிகிதாவை சிகிச்சைக்காக கரூர் மாவட்டம், தரகம்பட்டி அருகே உள்ள கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 

பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் அங்கு செல்ல விரும்பவில்லை. இதையடுத்து சந்திரசேகர் தனது மனைவி நிகிதா மற்றும் மாமியார் சித்ரா ஆகியோரை தனது காரில் அழைத்து கொண்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார்.

காரை சந்திரசேகர் ஓட்டினார். நிகிதாவும், சித்ராவும் காரின் பின் இருக்கையில் அமர்ந்து இருந்தனர். தோகைமலை அருகே உள்ள வெள்ளைகுளம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் உள்ள வேப்பமரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் சந்திரசேகர், நிகிதா, சித்ரா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 3 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் 3 பேரும் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், நிகிதாவும், அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து நிகிதா உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. சித்ரா, சந்திரசேகர் ஆகியோர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து நிகிதாவின் தந்தை காளீஸ்வரன் தோகைமலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் விபத்தை ஏற்படுத்தியதாக சந்திரசேகர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மரத்தில் கார் மோதி நிறைமாத கர்ப்பிணியும், வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.