ராமநாதபுரத்தில் அரசு பேருந்து மீது கார் மோதிய கோர விபத்து.. ஒரே குடும்பதைச் சேர்ந்த 5 பேர் பலி!

 

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (33). இவரது மனைவி பாண்டிச் செல்வி (28). இந்த தம்பதிக்கு தர்ஷினா ராணி (8), பிரணவிகா (4) என்ற மகளும், பிறந்து 12 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று இருந்தன. ராஜேஷ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தங்கச்சிமடத்தில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் ஆண் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் ராஜேஷ், தனது குடும்பத்துடன் பாண்டிச் செல்வியின் உறவினர்களான செந்தில் மனோகரன் (70), அங்காளேஸ்வரி (58) ஆகியோரை அழைத்துக் கொண்டு ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். குழந்தைக்கு சரியானபின் அனைவரும் வாடகை காரில் ஊர் திரும்பியுள்ளார்.

நேற்று நள்ளிரவு அந்த கார் உச்சிப்புளி அடுத்த பிரப்பன்வலசை அருகே வந்த போது, காருக்கு முன்னால் திருப்பத்தூரில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில், ராஜேஷ், அவரது மகன்களான தர்ஷினா ராணி, பிரணவிகா மற்றும் அவரது உறவினர்கள் செந்தில் மனோகரன், அங்காளேஸ்வரி ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

கார் ஓட்டுனர் சவரி பிரிட்டோ (35), பாண்டிச்செல்வி மற்றும் அவரது 12 நாள் கைக்குழந்தை ஆகிய மூவரும் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உச்சிப்புளி போலீசார், ஐந்து பேரின் உடல்கள்யும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.