தண்டால் எடுக்க வேறு இடமே கிடைக்கலயா..? எமனோடு விளையாடிய இளைஞர்.. அதிர்ச்சி வீடியோ!
திருச்சி கொள்ளிடம் பாலத்தில் இளைஞர் ஒருவர் தண்டால் எடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இன்றைய காலகட்டத்தில் இணையதளத்தில் ரீல்ஸ் மோகத்தில் இளைஞர்கள் மட்டுமல்லாது சிறுவர்களும் மூழ்கி இருக்கின்றனர். லைக்குகளை குவிக்க வேண்டும் என்ற ஆசையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பட்டவர்களும் வித்தியாசமான செயல்களை செய்து அதன்மூலம் ரீல்ஸ் வீடியோ தயாரித்து வெளியிடுகின்றனர். அவற்றில் சில வீடியோக்கள் விமர்சனங்களை எதிர்கொள்வதோடு மட்டுமல்லாமல் விபரீதமாகவும் முடிந்து விடுகிறது.
இந்த நிலையில் திருச்சி நம்பர் 1 டோல்கேட் செல்லும் கொள்ளிடம் பாலத்தின் சிமெண்டு தடுப்புச்சுவரில் இளைஞர் ஒருவர் விறுவிறுவென ஏறி ‘தண்டால்’ எடுக்க தொடங்கினார். அப்போது கொள்ளிடம் பாலத்தில் ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.
அவர் தவறி கீழே விழுந்தால் ரோட்டில்தான் விழ வேண்டும் அல்லது அந்த பக்கம் உள்ள ஆற்றில் விழ வேண்டும். இதனால் அதனைப் பார்த்து பதறிப்போன சிலர் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு அந்த இளைஞரை கீழே இறங்கி வருமாறு கேட்டுக்கொண்டனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே பாலத்தில் சாலையின் நடுவே உள்ள தடுப்பு கட்டையின் மீது இருசக்கர வாகனத்தை ஒட்டிய இளைஞரை கொள்ளிடம் போலீசார் பைக்கை பறிமுதல் செய்ததோடு அவரையும் கைது செய்த சம்பவம் குறிப்பிடத்தக்கது.