விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல்.. திமுக வேட்பாளர் அறிவிப்பு

 

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுவார் என்று அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி காலமானார். இதைத் தொடா்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஒரு சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால், 6 மாதங்களுக்குள் இடைத்தோ்தல் நடத்தப்பட வேண்டும்.

அதன்படி, விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தோ்தல் அறிவிப்பை இந்திய தோ்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.அதில்  அடுத்த மாதம் 10-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை 13-ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. 

இதற்கான வேட்புமனு தாக்கல் வரும்  14-ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் 21-ம் தேதி ஆகும்.  விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுவார் என்று அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. அன்னியூர் சிவா திமுக விவசாய அணி செயலாளராக உள்ளார்.