உடைந்து தெறித்த ரயில் பிரேக் ஷூ.. நொடிப்பொழுதில் விவசாயிக்கு நடந்த சோகம்!

 

ராமநாதபுரம் அருகே ஓடும் ரயிலில் இருந்து பிரேக் ஷூ கழன்று விழுந்ததில் விவசாயி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே எட்டிவயல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சண்முகவேலு (61). இவர் இன்று காலை 7.35 மணியளவில் தனது கிராமத்தில் விவசாய பணிக்காக தண்டவாளம் அருகே சென்று கொண்டிருந்தார். 

அப்போது அந்த வழியே ராமநாதபுரம் - மதுரை பயணிகள் ரயில் வேகமாகச் சென்றது. அதிலிருந்து இரும்பு பிரேக் ஷூ ஒன்று கழன்று விவசாயி சண்முகவேலின் முகத்தில் அடித்ததில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராமேசுவரம் ரயில்வே போலீசார் சண்முகவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் இது தொடர்பாக வழக்கு பதிவுப் செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் ரயிலில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.