அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம்.. தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

 

அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகள் அனைத்திலும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் முதல்வரின் காலை உணவு திட்டம் 15-9-2022 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் 1,545 பள்ளிகளைச் சேர்ந்த 1 லட்சத்து 14 ஆயிரம் குழந்தைகள் பயன்பெற்றனர். இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் இத்திட்டம் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளில், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தைத் தமிழ்நாடு அரசின் சார்பில் தொடங்கி வைத்தார்.

முன்னதாக புனித அன்னாள் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிக்கு வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பெருந்தலைவர் காமராஜரின் 122-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு தயார் செய்து வைக்கப்பட்டிருந்த உணவின் தரத்தை பரிசோதித்த அவர், அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்.