அருவி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன்.. சடலமாக மீட்பு.. குற்றாலத்தில் பரபரப்பு

 

பழைய குற்றால அருவியில் குளித்துக் கொண்டிருந்த 17 வயது சிறுவன் வெள்ளபெருக்கில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து கொண்டு இருக்கும் நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓடினர்.

இந்த நிலையில் பழைய குற்றால அருவியில் குடும்பத்தினருடன் குளித்துக் கொண்டிருந்த நெல்லையைச் சேர்ந்த 17 வயது சிறுவன் அஸ்வின், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். இதையடுத்து வெள்ளத்தில் சிக்கி, மாயமான சிறுவனை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர். திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 5 பேர் சிக்கிய நிலையில், 4 பேரை அங்கிருந்தோர் நல்வாய்ப்பாக மீட்டனர்.

இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட அந்த சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். 3 மணி நேரம் தேடுதலுக்கு பிறகு சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வனப்பகுதியினர் குறிப்பிட்ட இடம் ஒன்றை பார்வையிட்ட போது சிறுவனின் உடல் இருந்தது தெரிய வந்தது.

அருவியில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் சிறுவன் அஸ்வினின் உடலை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். பின்னர் சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டு சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.