நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் பலி... தாய் கண் முன்னே நடந்த சோகம்

 

சென்னையில் நீச்சல் பயிற்சிக்குச் சென்ற 10 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொளத்தூர் அடுத்த விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரத்னகுமார். இவரது மனைவி ராணி. இவர்களுக்கு கீர்த்தி சபரீஸ்கர் (10) என்ற மகன் இருந்தார். சிறப்பு குழந்தையான இவருக்கு மருத்துவர்களின் ஆலோசனைப்படி நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.

இதற்காக சென்னை கொளத்தூரில் தனியாருக்கு சொந்தமான நீச்சல் குளம் பயிற்சி மையத்தில், சிறுவனுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் நேற்று மாலை வழக்கம் போல் சிறுவனின் தந்தையும், தாயும் சிறுவனை அழைத்துக் கொண்டு நீச்சல் பயிற்சி மையத்திற்கு சென்றுள்ளனர். சிறுவனின் தாய், நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் தனது மகனை அருகில் இருந்து கவனித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், திடீரென சிறுவன் நீரில் மூழ்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய், பயிற்சியாளரிடம் கூறியதாக கூறப்படுகிறது. இதனிடையே சிறுவன் பேச்சு மூச்சு இல்லாமல் மயங்கியுள்ளார். இதையடுத்து ராணி, தனது கணவருடன் சிறுவனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த கொளத்தூர் போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து நீச்சல் பயிற்சி மையத்தின் உரிமையாளர் மற்றும் பயிற்சியாளர் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.