வைகை ஆற்றில் குளிக்க சென்ற 2 மாணவர்கள் சடலமாக மீட்பு.. சோழவந்தான் அருகே சோகம்!

 

குருவித்துறை அருகே உள்ள அணையில் குளித்த 2 மாணவர்கள் மாயன நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை ஊராட்சிக்குட்பட்ட சித்தாதிபுரம் கிராமம் வைகை ஆற்றுப்பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது. இப்பகுதியில் வைகை ஆற்றில் தண்ணீர் வரும் பொழுது இதன் இயற்கை காட்சிகளை யூடியூப் வாட்ஸ் அப் பேஸ்புக் மூலம் இப்பகுதி இளைஞர்கள் வெளியிட்டு வந்தனர். இதை பார்த்து மதுரை உட்பட பல்வேறு பகுதியில் இருந்து மக்கள் இங்கு வந்து ஆனந்தமாய் குளித்து சென்றனர்.

அந்த வகையில் மதுரை மாநகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் ரமணன். இவரது மகன் யாதேஷ் தினகரன் (17). இவர், மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று டியூசன் சென்ற இவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து கார்த்திக் ரமணன் அளித்த புகாரின் பேரில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

யாதேஷ் தினகரனின் நண்பரான விளாங்குடி பகுதியைச் சேர்ந்த ஜாசன் ஆஸ்ட்ரிக் காணாமல் போனது குறித்து புகார் எழுந்த நிலையில், போலீசார் இவர்களின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்து பார்த்தபோது குருவித்துறை சித்தாதிபுரம் வைகை ஆற்றில் சிற்றனையில் காண்பித்தது. தொடர்ந்து அங்கு சென்று பார்த்த போது இருவரின் காலணிகள், பேக் உள்ளிட்டவைகள் கிடந்தது. இதனால் தண்ணீரில் குளிக்கும் போது மாயமானார்களா அல்லது வேறு ஏதேனும் நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் தென்கரை வருவாய் ஆய்வாளர் சதீஷ் தலைமையில் வருவாய்த்துறையினர் காடுபட்டி போலீசார் குருவித்துறை ஊராட்சி செயலாளர் சின்னமாயன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து சோழவந்தான் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் நிலைய அலுவலர் ஹவுஸ் பாட்சா போக்குவரத்து அலுவலர் கண்ணன் தலைமையில் தீயணைப்படையினர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுப்பணித்துறைக்கு தகவல் கொடுத்து தண்ணீர் வரத்தை நிறுத்தினர்.

இதைத் தொடர்ந்து வைகை ஆற்றில் இறங்கி தீயணைப்பு படையினர் தேடுதலில் இறங்கினர். இதில் மாயமான இரண்டு மாணவர்களை சடலமாக மீட்டனர். இதை பார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது நெஞ்சை உருக்கியது. இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில் சித்தாலிபுரம் தடுப்பணையானது மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் இதுகுறித்து காவல்துறை எச்சரிக்கை போடு வைக்க வேண்டும் எனவும் முக்கியமாக பொதுமக்களை தடுப்பணை பகுதிக்கு அனுமதிக்க கூடாது எனவும் கேட்டுக் கொண்டனர்.