பாஜ எம்.எல்.ஏ வானதி சீனிவாசனுக்கு கொரோனா.. கோவை மருத்துவமனையில் அனுமதி!

 

பாஜக மகளிரணி தேசிய தலைவியும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாஜக மகளிரணியின் தேசிய தலைவியாக பதவி வகித்து வருபவர் வானதி சீனிவாசன். இவர் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை வீழ்த்தி வாகை சூடினார். தற்போது தமிழ்நாடு அரசியல் மற்றும் தேசிய அரசியல் என ஒரே நேரத்தில் 2 வகையான அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

கடந்த வாரம் ஐதராபாத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்ற வானதி சீனிவாசன், கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவை திரும்பினார். இந்நிலையில், தனக்கு லேசான காய்ச்சல் இருந்து வந்ததால், பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றிருந்தார். மருத்துவமனையில் வானதி சீனிவாசனுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வானதி சீனிவாசன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தனிவார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாஜக தலைவர்கள் வானதி சீனிவாசனின் உடல் நலம் குறித்து போனில் விசாரித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் அவதூறு வழக்கு உள்பட பல்வேறு பிரிவுகளில் தமிழ்நாடு பாஜக பிரமுகர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில் தற்போது வானதி சீனிவாசன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது அந்த கட்சியினருக்கும், வானதி சீனிவாசன் ஆதரவாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.