பியூட்டி பார்லர் உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை.. கந்துவட்டி கொடுமையால் நிகழ்ந்த விபரீதம்!

 

திருவாரூரில் கந்துவட்டி கொடுமையால் பியூட்டி பார்லர் உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்த கொண்டு சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் ஆண்டாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மனைவி பானுமதி. இந்த தம்பதிக்கு பாக்கியலட்சுமி (22) என்ற மகளும் விஷ்வா (19) என்ற மகனும் உள்ளனர். பாஸ்கர், பெரிய அளவிலான பியூட்டி பார்லர் நடத்தி வரும் நிலையில், தொழிலில் முதலீடு செய்ய வட்டிக்கு பணம் வாங்கி கட்டி வந்துள்ளார். ஆனால், அசல் தொகையை அவரால் அடைக்க முடியவில்லை.

இந்த நிலையில், பணம் கொடுத்தவர்கள், இவர் கட்டிய தொகையை வட்டியில் மட்டுமே வரவு வைத்து வந்துள்ளனர். அவர், வட்டியாக மட்டுமே 18 லட்சம் வரை கட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அசல் பணத்தை விரைந்து கட்ட வேண்டுமென பணம் கொடுத்தவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அச்சமடைந்த பாஸ்கர் கடந்த 7-ம் தேதி விஷம் அருந்தியுள்ளார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகச்சைக்காக அனுமதித்தனர்.

ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பாஸ்கர் உயிரிழந்தார். இந்நிலையில் அவர் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி-க்கு எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், “திருவாரூர் ரயில்வே காலனி கோவிந்தராஜ், அவரது மகன் இனியன் ஆகியோரிடம் நான் வட்டிக்கு கடன் வாங்கி 6 வருடங்கள் ஆகின்றன. அதற்காக 18 லட்சம் வட்டி மட்டுமே கொடுத்துள்ளேன். கந்து வட்டி, மீட்டர் வட்டி என மேலும் ரூ.12 லட்சம் கேட்டு என்னையும், எனது மகனையும் காலி செய்து விடுவதாக மிரட்டுகின்றனர்.

என்னால் கந்துவட்டி கொடுக்க முடியாத காரணத்தால் எனது உயிரை விடுவதை தவிர வேறு வழி தெரியவில்லை. இதற்கெல்லாம் கோவிந்தராஜ் மற்றும் அவரது மகன்தான் காரணம். என் மறைவுக்குப்பின் என் குடும்பத்தில் உள்ளவர்களை பாதுகாக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என எழுதியிருந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கந்துவட்டி வசூலிப்போரை போலீசார் விரைந்து கைது செய்ய வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.