பணத்தைத் திருடிய பார் ஊழியர்.. அடித்தே கொன்ற உரிமையாளர்கள்.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்
கோவை அருகே பணத்தை திருடிய பார் ஊழியரை, பார் உரிமையாளர்களே அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் கந்தே கவுண்டன் சாவடி அருகே வாளையார் பகுதியில் பாருடன் இணைந்த டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. அந்தப் பாரை கோவை புதூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (31), ஸ்டான்லி (33) ஆகியோர் நடத்தி வருகின்றனர். இங்கு நவக்கரையை சேர்ந்த மணிகண்டன் (35) என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 10-ம் தேதி மணிகண்டன் வழக்கம்போல் டாஸ்மாக் பாரில் வேலையில் இருந்தார். அப்போது அங்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் தனது பர்ஸை மறந்து வைத்துவிட்டுச் சென்றார். அவர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது அந்தப் பர்ஸை காணவில்லை. இதுகுறித்து அவர் பார் உரிமையாளர்களான சதீஷ்குமார், ஸ்டான்லி ஆகியோரிடம் சொல்லி இருக்கிறார்.
இதையடுத்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, பார் ஊழியர் மணிகண்டன், அந்தப் பர்ஸை எடுத்துச் செல்வது பதிவாகி இருந்தது. இதையடுத்து பார் உரிமையாளர்கள், மணிகண்டனை சென்போனில் அழைத்து, வாடிக்கையாளரின் பர்ஸை ஒப்படைக்குமாறு கூறினர். அதன்படி அந்தப் பர்ஸை கொண்டு வந்து மணிகண்டன் ஒப்படைத்தார். ஆனால் அதனுள்ளே பணம் இல்லை.
பணம் எங்கே என்று கேட்டபோது மணிகண்டன் அங்கிருந்து திடீரென்று ஓட்டம் பிடித்தார். அவரை சதிஷ்குமார், ஸ்டான்லி மற்றும் அவர்களின் நண்பர்களான கோவை புதூரைச் சேர்ந்த கண்ணன் (35), அண்ணாதுரை (32) ஆகியோர் காரில் துரத்திச் சென்றனர். இவர்கள் வாளையார் டேம் ரோட்டில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் மணிகண்டனை மடக்கிப் பிடித்து சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.
இதனால் மயங்கிய மணிகண்டன், சுந்தராபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இதுகுறித்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், மணிகண்டனை அடித்துக் கொலை செய்ததாக, சதீஷ்குமார், ஸ்டான்லி, கண்ணன், அண்ணாதுரை ஆகியோரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.