இந்த விநாயகர் சிலைக்கு தடை.. உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

 

பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலம் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா நாளை (செப். 18) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்படும். பின்னர் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படும். விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

இதனிடையே ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் தனது நிறுவனம் தயாரித்துள்ள விநாயகர் சிலைகளை போலீசார் விற்பனை செய்ய தடை விதித்துள்ளனர். அந்த தடை உத்தரவை ரத்து செய்து தனது விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய அனுமதிக்க கோரி நேற்று வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவானது தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பயன்படுத்தி செய்யப்பட்ட சிலைகளை விற்பனை செய்கிறார். இதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதையடுத்து கிராம நிர்வாக அலுவலரின் புகாரின் பேரில் சிலை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என அரசு வழக்கறிஞர் வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க அனுமதிக்க முடியாது. ஆனால், அந்த சிலைகள் விற்கப்படுவதை அதிகாரிகள் தடுக்க முடியாது. சிலை விற்பனையை தடுப்பது அடிப்படை உரிமை மீறலாகும். எனவே, மனுதாரரின் சிலை விற்பனையை அதிகாரிகள் தடுக்கக்கூடாது என உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரத சக்கரவர்த்தி அமர்வு, பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலம் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை விற்கலாம் என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டனர். 

விஷம் என்பதில் ஒரு துளி விஷம் அதிக விஷம் என்பது இல்லை, எல்லாமே விஷம்தான்; இவ்வகை சிலைகள் தயாரிக்கவும், விற்கவும் கூடாது என்று இரு நீதிபதிகள் அமர்வு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.