கலைஞர் உலக அருங்காட்சியகம்.. மார்ச் 6-ம் தேதி முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதி!

 

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘கலைஞர் உலகம்’ என்ற அருங்காட்சியகம் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுகிறது.

முன்னாள் முதல்வரும், மறைந்த திமுக தலைவருமான கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வராகவும், 60 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகவும், 50 ஆண்டு திமுக தலைவராகவும் இருந்த கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்திருந்தார். அதன்படி கலைஞருக்கு நினைவிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. அதே சமயம் அண்ணா நினைவிடமும் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றன.

இந்த நிலையில், அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும், கலைஞரின் புதிய நினைவிடத்தையும் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த பிப்ரவரி 26-ம் தேதி மாலை 7 மணி அளவில் திறந்து வைத்தார். அதன் பின்னர் அண்ணா மற்றும் கலைஞர் சிலைகள் மற்றும் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில் கலைஞர் நினைவிடத்தின் நிலவறையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தை நாளை மறுநாள் (மார்ச் 6) முதல் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படுகிறது எனவும் இணையதளம் மூலம் அதற்கான அனுமதிச் சீட்டு பெற்றுப் பார்வையிடலாம் எனத் தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு விடுத்துள்ள செய்திக் குறிப்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘கலைஞர் உலகம்’ என்ற அருங்காட்சியகம் நாளை மறுதினம் (மார்ச் 6) முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்படும் இதனைப் பார்வையிடுவதற்குத் தமிழ்நாடு அரசின் https://www.kalaignarulagam.org/ என்ற இணைய முகவரி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணைய முகவரியில் பொதுமக்கள் பதிவு செய்து அனுமதிச் சீட்டினைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

கலைஞர் உலகத்திற்கான அனுமதிச் சீட்டு பெறுவதற்குக் கட்டணம் ஏதுமில்லை. முற்றிலும் இலவசமாக கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தை பொதுமக்கள் கண்டுகளிக்கலாம். ஒருவர் ஒரு மொபைல் எண்ணின் மூலம் அதிகபட்சமாக 5 அனுமதிச் சீட்டுகள் வரை பெற்றுக் கொள்ள இயலும். இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட அனுமதிச் சீட்டுடன் வருபவர்களுக்கு நிலவறையிலுள்ள கலைஞர் உலகத்திற்கு அனுமதி வழங்கப்படும்.

மேலும், ஒவ்வொரு நாளும் காலை 9.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 6 காட்சிகளாக நடைபெறும். பொதுமக்கள் தங்களுக்கு வசதியான காட்சி நேரத்தைத் தேர்வுசெய்து முன்கூட்டியே அனுமதிச் சீட்டினைப் பெற்றுக் கொள்ளலாம். அக்காட்சியினைக் காண வரும் பொதுமக்கள், காட்சி நேரத்திற்கு 30 நிமிடத்திற்கு முன்பாகவே வருகைபுரிய வேண்டும். கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தை பார்வையிட ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் ஆகும். எனினும் கருணாநிதியின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதிச் சீட்டு ஏதும் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.