ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுங்க.. தவெக தலைவர் விஜய் கடும் கண்டனம்!
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங். இவர் அயனாவரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று இரவு பெரம்பூர் வேணுகோபால்சாமி கோவில் தெருவில் புதிதாக கட்டி வரும் வீட்டின் பணிகளை பார்ப்பதற்காக சென்றிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங்கை மீட்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக காவல் துறைக்கு தகவல் கொடுத்ததை அடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த பெரம்பூர் மற்றும் செம்பியம் போலீசார், ஆம்ஸ்ட்ராங்கை மீட்டு கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி ஆம்ஸ்ட்ராங் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த கொலைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், 10 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மேலும், சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளை சேகரித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். அசம்பாவிதச் சம்பவங்களைத் தவிர்க்க பெரம்பூர், செம்பியம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் உடல், பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் மூலம் உடல் கொண்டுசெல்லப்பட்டது. மேலும், அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்க ராஜீவ் காந்தி அரசுமருத்துவமனையை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையை உலுக்கிய இந்த படுகொலையை பல அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டித்து வருகின்றனர்.
இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இது போன்ற கொடும் குற்றச் சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். சமரசம் இல்லாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.