ஆக்ரோஷமாக ஓடி வந்த அரிக்கொம்பன்... தேனி மாவட்டம் கம்பத்தில் 144 தடை உத்தரவு!!

 

அரிக்கொம்பன் யானை முகாமிட்டுள்ள கம்பம் நகர் பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் சின்னகானல் பகுதியில் அரிசி கொம்பன் என்ற காட்டு யானை எட்டுக்கும் மேற்பட்டோரைக் கொன்றுள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் புகுந்து அரிசியைத் தின்று அட்டகாசம் செய்தது. இதனால் இந்த யானைக்கு அரிசி கொம்பன் எனப் பெயரிடப்பட்டது. இந்த யானையைக் கடந்த மாதம் மயக்க ஊசி போட்டு வனத்துறையினர் பிடித்தனர். பின்பு அதனை தமிழக - கேரள எல்லை பகுதியில் உள்ள பெரியாறு புலிகள் சரணாலயத்தில் வனத்துறையினர் விட்டனர்.

ஆனால் அந்த யானை தேனி மாவட்டம் மேகமலை எஸ்டேட் பகுதிக்கு சென்று, அங்கு உள்ள தொழிளாளர்கள் மற்றும் அவர்களின் குடியிருப்புகளை நாசம் செய்தது. இந்நிலையில், அரிக்கொம்பன் யானை கூடலூரில் லோயர் கேம்ப் பகுதியில் உள்ள தென்னந்தோப்புகளை நாசம் செய்ததாக பொது மக்கள் வனத்துறை மற்றும் போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தமிழக, கேரள போலீசார் தொழிலாளர்கள் அங்கு செல்ல தடை விதித்தனர். அதன் பின்னர் பெறும் முயற்சிக்கு பின்பு வனத்துறையினர், அரிக்கொம்பன் யானையை வனப்பகுதிக்கு விரட்டினர்.

இந்நிலையில் யானை தேனி மாவட்டம் கம்பம் பகுதிக்கு வந்து அங்குள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் பதற்றம் அடைந்தனர். வனத்துறையினர் யானையை பின் தொடர்ந்து பொதுமக்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த மாதம் யானை பிடிக்கப்பட்டு பெரியார் புலிகள் காப்பகத்தில் விடப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் கம்பத்திற்கு வந்துள்ளது. இதுவரை 18 பேரை கொன்று அட்டகாசம் செய்துவரும் அரிக்கொம்பன் யானை, மீண்டும் குடியிருப்பு பகுதியில் புகுந்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கம்பத்தில் அரிக்கொம்பன் யானை நடமாடும் நிலையில் மக்கள் தேவையின்றி வெளியே வருவதை தடுக்க தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரிக்கொம்பன் யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர். அரிக்கொம்பன் நடமாட்டத்தால் கம்பத்தில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.