செப்டம்பரில் பள்ளிகளுக்கு இத்தனை நாட்கள் விடுமுறையா? குஷியில் மாணவர்கள்!

 

தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு எப்போது காலாண்டு விடுமுறை மற்றும் செப்டம்பர் மாதத்தில் எத்தனை விடுமுறை நாட்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும், தனியார் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் காலாண்டு தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 14ம் தேதியும், 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 18ம் தேதியும் தேர்வுகள் துவங்க உள்ளது. 11 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 15ம் தேதி துவங்க உள்ளது.

இந்த நிலையில், 1 முதல் 3-ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 22-ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை 10 நாட்கள் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 4 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 2ம் தேதி வரை 5 நாட்கள் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் அக்டோபர் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

செப்டம்பர் 28ம் தேதி மிலாடி நபி என்பதால் அரசு விடுமுறையாகும். செப்டம்பர் 30, அக்டோபர் 1 ஆகியவை சனி, ஞாயிறு என வார இறுதி நாட்களாக வந்துவிடுகிறது. அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அரசு விடுமுறையாகும். இதையடுத்து அக்டோபர் 3 செவ்வாய் அன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. 29ம் தேதி ஒரே ஒரு நாள் மட்டுமே காலாண்டு விடுமுறை எனக் கூறும் வகையில் அமைந்துள்ளது.

செப்டம்பர் மாதம் 5-ம் தேதி ஆசிரியர்கள் தினமும், 19-ம் தேதி விநாயகர் சதுர்த்தியும் சனிக்கிழமைகளில் வருகின்றன. இதன் அடிப்படையில் 1 முதல் 3-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு செப்டம்பர் மாதத்தில் மட்டும் அதிகபட்சமாக 15 நாட்களும், மற்ற மாணவர்களுக்கு அதிகபட்சமாக 10 நாட்கள் வரையும் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது.