தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனம்

 

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டுள்ளார். 

2018-ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரியாக உள்ள சத்ய பிரதா சாகு, கால்நடை பராமரிப்புத் துறை முதன்மைச் செயலாளராக சில நாட்களுக்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தார். இதையடுத்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரி என்ற பெருமையை அர்ச்சனா பட்நாயக் பெற்றுள்ளார். அர்ச்சனா பட்நாயக் தற்போது தமிழக அரசின் சிறு, குறு தொழிலாளர் துறையின் செயலாளர் ஆக பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பு ஆசிரியர் தேர்வாணையக் குழுவின் தலைவராகவும் இருந்தார். முன்னதாக ஆசிரியர் தேர்வாணையக் குழுவின் தலைவராகவும் இருந்திருக்கிறார்.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அர்ச்சனா பட்நாயக் கடந்த 2002-ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகரியாக தமிழ்நாடு கேடரில் பணியில் சேர்ந்தார். கோயம்புத்தூர், நீலகிரி மாவட்ட ஆட்சியராக பணியாற்றி இருக்கிறார். கோயம்புத்தூர் மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் என்ற பெருமையும் அர்ச்சனா பட்நாயக்குத்தான் உள்ளது. கடந்த ஆண்டு ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு உதவ தமிழ்நாடு அரசால் அனுப்பப்பட்ட குழுவில் அர்ச்சனா பட்நாயக்தான் இடம் பெற்றிருந்தார். அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ் தான் தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்து 2026 சட்டசபை தேர்தலை நடத்த போகிறார்.