லண்டனுக்கு அரசியல் படிக்க செல்லும் அண்ணாமலை.. அடுத்த தமிழ்நாடு பாஜக தலைவர் யார்..? 

 

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகஸ்ட் மாதம் லண்டனில் படிக்க செல்ல இருப்பதால் தமிழ்நாட்டிற்கு புதிய பாஜக தலைவரை நியமிக்க தேசிய தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டின் பாஜக தலைவராக தற்போது அண்ணாமலை பதவி வகித்து வருகிறார். இவர் கர்நாடக மாநிலத்தில் காவல்துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர். அதன்பின் அரசியலில் ஆர்வம் ஏற்பட்டு தமிழ்நாடு அரசியலுக்கு வந்தவர். இவர் மீது பல விமர்சனங்கள் இருந்தாலும் தமிழ்நாட்டில் பாஜகவை வளர வைக்க வேண்டுமென முயற்சி செய்து வருகிறார்.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக 10 சதவீத வாக்குகளை பெற்றிருக்கிறது. அதேநேரம், தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெறவில்லை. எனவே, தமிழ்நாட்டில் பாஜக தலைவர் மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு இப்போது புதிய பாஜக தலைவர் வரவிருக்க்கிறார்.

மேற்படிப்புக்காக அண்ணாமலை லண்டனுக்கு செல்ல இருக்கிறார். இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் என்கிற தலைப்பில் ஒரு படிப்பு இருக்கிறது. ஆண்டுதோறும் இந்தியாவில் இருந்து 12 அரசியல் தலைவர்களை இந்த படிப்பை படிக்க இங்கிலாந்து அரசு அழைப்பு விடுக்கிறது. அதன்படியே பாஜகவில் இருந்து அண்ணாமலை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

வருகிற ஆகஸ்டு மாதம் செல்லும் அவர் அடுத்த வருடம் துவக்கத்தில் தமிழ்நாடு திரும்புகிறார். 4 மாதம் அங்கு அவர் தங்கி அதை படிக்க வேண்டும் என்பதால் தற்காலிகமாக ஒருவரை தமிழ்நாட்டின் பாஜக தலைவராக நியமிக்கலாம் என பாஜக தேசிய தலைமை ஆலோசனை செய்து வருகிறது.

அந்த லிஸ்ட்டில் தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் ஆகியோரில் ஒருவரை தமிழ்நாடு பாஜகவின் புதிய தலைவராகவோ அல்லது பொறுப்பு தலைவராகவோ நியமிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது