அண்ணாமலைக்கு ஒன்றிய அமைச்சர் பதவி..? தொண்டர் உற்சாகம்

 

3வது முறையாக மோடி நாளை மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ள நிலையில், அண்ணாமலைக்கு ஒன்றிய அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது. கடந்த 4-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடந்தது. பாஜகவுக்கு தனி மெஜாரிட்டிக்கான 272 சீட் கூட கிடைக்கவில்லை. 240 இடங்களில் மட்டுமே பாஜக வென்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. பாஜகவின் 240 சீட்டுகளுடன் கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் 52 இடங்களில் வெற்றி பெற்றனர். இதனால் மத்தியில் மீண்டும் பிரதமர் மோடி தலைமையில் என்டிஏவின் கூட்டணி ஆட்சி நடக்கிறது.

நாளை இரவு 7.15 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகையில் மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்க உள்ளார். இதன்மூலம் 3 முறை தொடர்ந்து பிரதமரானார் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் சாதனையை சமன் செய்ய உள்ளார். இந்நிலையில் தான் தற்போது பிரதமர் மோடியின் ஒன்றிய அமைச்சரவை தொடர்பான பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெற்றது. இதனால் அதிமுக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியால் ஒரு தொகுதியில் வெல்ல முடியாதது குறித்து நரேந்திர மோடியும் பேசி இருந்தார். இருந்தாலும் பாஜகவின் வாக்கு சதவிகிதம் அதிகரித்துள்ளதாக அக்கட்சியினர் கூறி வருகின்றனர்.

குறிப்பாக தென் தமிழ்நாட்டில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி பாஜக முன்னேறி உள்ளது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, தேனி உள்ளிட்ட தொகுதிகளில் பாஜக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் 2வது இடத்திற்கு வந்துள்ளனர். ஓபிஎஸ் உடன் கூட்டணி அமைத்தது ஒரு காரணமாக இருந்தாலும், முக்குலத்தோர் சமூக வாக்குகள் பாஜக பக்கம் திரும்பியுள்ளதாக பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடியின் அமைச்சரவையில் தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேருக்கு அமைச்சர் பொறுப்பு அளிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ஒன்றிய அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் தமிழக பாஜகவில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அல்லது தமிழிசை செளந்தரராஜன் நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளி வருகிறது.