துணிவு பட பாணியில் பொம்மை துப்பாக்கியை வைத்து வங்கியில் கொள்ளை முயற்சி.. மடிக்கி பிடித்த இந்தியன் தாத்தா.. வைரல் வீடியோ

 

திருப்பூர் அருகே துணிவு பட பாணியில் கொள்ளையடிக்க முயன்ற நபரை வங்கியில் இருந்த நபர் மடிக்கி பிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த அலங்கியம் பகுதியில் கனரா வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் சனிக்கிழமை என்பதால் வங்கி வழக்கம்போல் இயங்கியதுடன் ஏராளமானோர் பணம் செலுத்தவும், எடுக்கவும் குவிந்திருந்தனர். அப்போது வங்கிக்குள் உடலில் பர்தா முகத்தில் முகமூடி அணிந்த  நபர் ஒருவர் நுழைந்து தன்னிடம்  துப்பாக்கி மற்றும் டைம் பாம் இருப்பதாக காண்பித்து வங்கியில் இருந்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்துள்ளார். 

அப்போது வங்கிக்குள் ஏராளமானோர் இருந்ததால் பர்தா அணிந்த நபரை துண்டு போட்டு மடக்கி பிடித்தனர். பின்னர் கையிலிருந்த துப்பாக்கியை பிடுங்கியதில் அது பொம்மை துப்பாக்கி என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்த டைம் பாமும் போலி என்பதை உறுதி செய்தனர். தொடர்ந்து அவரை சரமாரியாக தாக்கிவிட்டு போலீசாருக்கு இது குறித்து தகவல் அளித்தனர். 

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பர்தா அணிந்த நபரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் காந்தி நகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் (19) என்பதும் அவர் பாலிடெக்னிக் 2-ம் ஆண்டு பயிலும் மாணவர் என்பதும் தெரியவந்தது. மேலும், அவர் கொள்ளைக்கு பயன்படுத்திய பர்தா, முகமூடி, பொம்மை துப்பாக்கி, டைம்பாம் என அனைத்தையும் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த சுரேஷை மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.