அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்

 

அலங்காநல்லூர் கீழக்கரை கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக பிரத்யேகமாக கட்டப்பட்டுள்ள அரங்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று  திறந்து வைக்கவுள்ளார்.

தமிழரின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியினை சிறப்பாக நடத்துவதற்கு ஏதுவாக, மதுரை மாவட்டம் கீழக்கரை கிராமத்தில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார். அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் விதமாக மதுரை அலங்காநல்லூர் கீழக்கரையில் பிரமாண்டமான ஏறுதழுவுதல் அரங்கம் கட்டப்படுவதற்காக (3.2.2023) அன்று அரசாணை வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து ரூ.62 கோடியே 77 லட்சத்து 62 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 18.3.2023 அன்று கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

இதன்படி அலங்காநல்லூர் அருகேயுள்ள கீழக்கரை கிராமத்தில் 16 ஏக்கரில், 44 கோடி ரூபாய் மதிப்பில் இந்த அரங்கம் கட்டப்பட்டுள்ளது. ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில் 3 தளங்களாக நவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள அரங்கத்திற்கு கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என பெயரிடப்பட்டுள்ளது.

இங்கு, பிரமாண்ட நுழைவு வாயில், வாடிவாசல், மாடுபிடி வீரர்கள் பரிசோதனை மையம், காளைகள் பதிவு செய்யும் மையம், அருங்காட்சியகம், மருத்துவமனை, காளைகள் சிற்பக்கூடம் என ஏராளமான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விளையாடுவதற்கான களம் அரைவட்ட வடிவில் 500 அடி பரப்பளவில் வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே நேரத்தில் 4,500 பேர் போட்டிகளை பார்த்து ரசிக்கலாம்.

இந்த அரங்கத்தை முதல்வர் திறந்து வைத்தப்பின், ஜல்லிக்கட்டு போட்டியையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை போட்டி நடத்தப்படவுள்ளது. 500 காளைகள் மற்றும் 300 வீரர்கள் களம் இறங்க டோக்கன்கள் வழங்கப்பட்டு உள்ளன.