எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது

 

சட்டப்பேரவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் அதிமுக எம்எல்ஏக்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 150-க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் 69 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 50க்கும் அதிகமானவர்கள் சிகிச்சை முடிந்து நல்லபடியாக வீடு திரும்பி உள்ளனர்.

இந்நிலையில் கள்ளச்சாராய பலிக்கு பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும். சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி வருகிறார். இதுதொடர்பாக நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து புகார் மனு அளித்தார்.

மேலும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி தொடர்பாக அதிமுக எம்எல்ஏக்கள் கருப்புச் சட்டை அணிந்து சட்டசபை நிகழ்வுகளில் பங்கேற்று வந்தனர். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தவறி விட்டதாகவும், இதற்கு பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் என்றும் அதிமுகவினர் வலியுறுத்தி வருகின்றனர். சட்டசபையில் கேள்வி நேரத்திலேயே இந்த விவகாரம் பற்றி விவாதிக்க அவர்கள் வலியுறுத்தி கோஷமிட்டனர். சபாநாயகர் இருக்கை முன்பு வந்து அமளி செய்தனர்.

இதையடுத்து கடந்த 21-ம் தேதி அதிமுகவினர் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். அதன்பிறகு தொடர்ந்து சட்டசபையை அதிமுகவினர் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். கடந்த 2 நாட்கள் அவர்கள் சட்டசபை சபாநாயகர் உத்தரவை தொடர்ந்து குண்டு கட்டாக வெளியேற்றப்பட்டனர். மேலும் சட்டசபையின் மாண்பை சீர்குலைத்ததாக கூறி நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக உறுப்பினர்கள் பங்கேற்க தடை விதித்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சட்டமன்றத்தில் பேச அனுமதி வழங்காததைக் கண்டித்தும், கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சிபிஐ விசாரணை கோரியும் அதிமுக எம்எல்ஏக்கள் இன்று சென்னையில் உண்ணாவிரத அறப்போராட்டம் மேற்கொள்ளவுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று அறிவித்தார். இதற்கு போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் அவர்கள் இன்று ஒருநாள் உண்ணாவிரதத்தை தொடங்கி உள்ளனர்.

முன்னதாக உண்ணாவிரதத்துக்கு போலீசார் 23 நிபந்தனைகளை விதித்துள்ளனர். அதன்படி போராட்டம் நடத்தும் இடத்துக்கு எந்த காரணம் கொண்டும் வாகனங்களை கொண்டு வரக்கூடாது. பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படுத்த கூடாது. அமைதியான முறையில் உண்ணாவிரதம் இருக்க வேண்டும். காவல் அதிகாரிகள் குறிப்பிடும் இடத்தில் தான் உண்ணாவிரதம் இருக்க வேண்டும். அரசியல் தலைவர்கள், தனிப்பட்ட நபர்கள், அரசு அதிகாரிகளை தாக்கி பேசவோ, முழக்கம் எழுப்பவோ கூடாது என்பன உட்பட 23 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.