மதுரையில் கோர விபத்து.. சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது கார் மோதி குழந்தை உள்பட 5 பேர் பலி!
மதுரை அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த கனகவேல். இவர், தளவாய்புரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் பூ மிதி திருவிழாவில் பங்கேற்க குடும்பத்துடன் சென்றிருந்தார். நிகழ்ச்சி முடிந்து சாமி தரிசனம் செய்துவிட்டு இன்று காலை தளவாய்புரத்தில் இருந்து மதுரை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். அவர் காரானது திருமங்கலம் சிவரக்கோட்டை நான்கு வழிச்சாலையில் வந்தபோது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் நிலையூரை சேர்ந்த கொய்யாப்பழ வியாபாரி பாண்டி சாலையை கடக்க முயன்றுள்ளார்.
மதுரை நோக்கி காரில் வந்து கொண்டிருந்த கனகவேல் இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருக்க கட்டுப்படுத்த முயன்ற போது காரானது இருசக்கர வாகனம் மீது மோதி நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து உள்ளானது.இந்த விபத்தில் காரில் இருந்தவர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்தனர். கொய்யாப்பழ வியாபாரி பாண்டியும் உயிரிழந்தார்.
காரில் வந்த கனகவேல் மற்றும் அவரது மனைவி கிருஷ்ணகுமாரி, உறவினர் நாகஜோதி மற்றும் குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக நேற்றைய தினம் திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே காரும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். இதில் 3 மாத குழந்தையும் அடங்கும். இந்த விபத்து சம்பவம் தமிழக மக்களிடையே மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இன்று நடந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.