ஆவின் பால் விலை உயர்வு.. பாக்கெட் கலரும் மாற்றம்.. அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!

 

தமிழ்நாட்டில் 200 மில்லி லிட்டர் ஆவின் பால் பாக்கெட் விலை 50 காசுகள் உயர்த்தப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் அல்லது ஆவின் நிறுவனம் என்பது பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளைச் செய்து வரும் தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் சார்பாக நாள்தோறும் 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் சராசரியாக 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. அதில் சுமார் 30 லட்சம் லிட்டர் பால் நாள்தோறும் நுகர்வோருக்கு தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆவின் நிறுவனத்தில் இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் மெஜந்தா நிறத்திலும், சமன்படுத்தப்பட்ட பால் நீல நிறத்திலும், நிலைப்படுத்தப்பட்ட பால் பச்சை நிறத்திலும், கொழுப்புச் சத்து நிறைந்த பால் ஆரஞ்சு நிறத்திலும், டீ மேட் - கொழுப்புச் சத்து நிறைந்த பால் சிவப்பு நிறத்திலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதேபோல் தனியார் நிறுவனங்களும் பால் விற்பனியில் ஈடுபட்டு வருகின்றது.

இந்த நிலையில், ஆவினின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகள் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளாது. ‘ஆரஞ்சு’ வண்ணத்தில் 200 மில்லி லிட்டர் பால் பாக்கெட் விற்பனைக்கு வந்த நிலையில் புதிய வடிவமாக ஆவின் டிலைட் என்ற பெயரில் ‘வைலட்’ நிறத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 200 மில்லி லிட்டர் ஆவின் பால் நேற்றைய தினம் ரூ.9.50க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று முதல் ரூ.10 என விற்பனை செய்யப்படுகிறது. முன் அறிவிப்பின்றி இந்த திடீர் விலை உயர்வு மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 5 லிட்டர் எடை கொண்ட பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் விலை ரூ.10 உயர்ந்தது. 5 லிட்டர் எடை கொண்ட பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் விலை ரூ.210-க்கு விற்பனையாகி வந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி ரூ.10 அதிகரித்து ரூ. 220க்கு விற்பனையானது.