மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு... உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

 

தமிழ்நாடு அரசின் கொள்ளை முடிவில் தலையிட விரும்பவில்லை என வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒன்றிய அரசின் உத்தரவை தொடர்ந்து வங்கி கணக்குகள் பான் கார்டுடன் ஆதாரை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின் படி தமிழ்நாட்டில் வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய நுகர்வோர், தங்களது மின் இணைப்பு எண்ணை, ஆதாருடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. மேலும், மின் மானியம் பெறுவதற்கு மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது அவசியம் என தெரிவிக்கப்பட்டது.

மின் இணைப்புகளை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணி தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் 15-ம் தேதி தொடங்கப்பட்டது. இதன் மூலம், தமிழ்நாடு மின்சார வாரியத்தை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும் முடியும் என அரசின் தரப்பில் கூறப்பட்டது. இதுவரை 2.34 கோடிக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் ஆதார் உடன் இணைக்கப்பட்டதாக தமிழ்நாடு மின் வாரியம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில், தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க தடையில்லை என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ரவி என்பவர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அரசு மானியம் உரிய நபருக்கு கிடைப்பதை உறுதி செய்யவே மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கேட்டுக் கொண்டதாக தமிழ்நாடு அரசு சார்பில் வாதிடப்பட்டது. மேலும் இது தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவு என்றும் விளக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தமிழ்நாடு அரசின் கொள்ளை முடிவில் தலையிட விரும்பவில்லை என வழக்கை தள்ளுபடி செய்தனர். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்திலேயே சீராய்வு மனு தாக்கல் செய்யவும் மனுதாரருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைப்பதற்கு ஜனவரி 31ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஒருசிலர் இணைக்காததால் பிப்ரவரி 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.