கோர விபத்து.. சிறுமி உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி.. தேவகோட்டை அருகே சோகம்

 

தேவகோட்டை அருகே வேன் மீது கார் மோதிய விபத்தில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மலேசியாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு ஆன்மிக சுற்றுலா வந்த 12 பேர் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து திருச்சிக்கு டெம்போ வேனில் சென்று கொண்டிருந்தனர். வேனை மதுரையைச் சேர்ந்த ஓட்டுநர் கந்தையா (40) ஓட்டினார். 

அதே சமயத்தில் தஞ்சாவூர் அருகே உள்ள மாதா கோட்டையைச் சேர்ந்தவரும் தஞ்சாவூர் காந்தி நகர் பகுதியில் வசித்து வரும் பவுல் டேனியல் (38) அவரது மகள்கள் சூசன்ரெகுமா (10), ஹெலன் சாமா (7) , சித்தப்பா மைக்கேல் (63) ஆகிய 4 பேர் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள ஆண்டாஊரணி மணலூர் கிராமத்திற்கு உறவினர் வீட்டு விசேசத்துக்காக காரில் திருச்சி- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் காரில் வந்து கொண்டிருந்தனர். அந்தக் காரை பவுல் டேனியல் ஒட்டி வந்தார். 

இந்த நிலையில் தேவகோட்டை அருகே மார்க்கண்டேயன்பட்டி மணிமுத்தாறு ஆற்றுப் பாலம் அருகே டெம்போ வேனும் - காரும் நேருக்கு நேராக மோதியது. இந்த சம்பவத்தில் வேனில் இருந்த ஓட்டுநர் மற்றும் 9 மலேசிய நாட்டினர் காயமடைந்தனர். விபத்து பற்றிய தகவல் அறிந்த தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் தாலுகா காவல் ஆய்வாளர் சரவணன் வட்டாட்சியர் சேதுநம்பு ஆகியோர் பொதுமக்கள் உதவியுடன் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

விபத்தில் சம்பவ இடத்திலேயே பவுல் டேனியல், சூசன்ரேமா, ஹெலன் சாமா, மைக்கேல் ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த மலேசியா நாட்டைச் சேர்ந்த யோகேஸ்வரி (38), மோகாசினி (21), அமுதாதேவி (46), குணசுந்தரி (51), ரேணுகா (51), சந்திரன் (55), ரெவின் (26) ஆகியோர்கள் கிச்சைக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் தீவிர சிகிச்சைக்காக காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவம் குறித்து தேவகோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.