திருமணத்துக்கு பெண் தர மறுத்த தம்பதியை சுட்டு வீழ்த்திய வளர்ப்பு மகன்... விழுப்புரம் அருகே அதிர்ச்சி சம்பவம்!!

 

கண்டாச்சிபுரம் அருகே, திருமணத்திற்கு பெண் தர மறுத்த தம்பதியை, நாட்டுத் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே உள்ள கடையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி கஸ்தூரி. இந்த தம்பதிக்கு பாரதிதாசன் என்ற மகன் உள்ளார். இதில், கஸ்தூரி 13 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்ட நிலையில், கண்ணனும் மகனை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார். இதனால் ஆதரவற்று தவித்த பாரதிதாசனுக்கு, அதேப் பகுதியை சேர்ந்த கோவிந்தன் - கலையம்மாள் தம்பதி ஆதரவளித்து தங்களுடனே வளர்த்து வந்திருக்கின்றனர். இந்த கோவிந்தன் - கலையம்மாள் தம்பதிக்கு, மூன்று பெண், ஒரு ஆண் பிள்ளைகள் இருக்கின்றனர்.

இவர்களுடன் சேர்ந்தே பாரதிதாசன் வளர்ந்து வந்திருக்கிறார். தன்னுடையப் படிப்பை பாதியிலேயே நிறுத்திய பாரதிதாசன், கோவிந்தனுடன் விவசாய பணியில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இதனிடையே, கோவிந்தன் மூத்த மகளான 17 வயது சிறுமியை, பாரதிதாசனுக்கு திருமணம் செய்து வைப்பதாக அந்த தம்பதி ஆசைவார்த்தைக் கூறி வந்ததாகச் கூறப்படுகிறது. இதனால் ராணியை ஒருதலையாக பாரதிதாசன் காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 15-ம் தேதி கோவிந்தனின் மூத்த மகளுடன் பாரதிதாசனுக்கு சண்டை ஏற்பட்டிருக்கிறது. அப்போது கோபமடைந்த பாரதிதாசன், இரும்பு பைப்பை கொண்டு அந்த சிறுமியை தாக்கி உள்ளார். இதனைக் கண்ட கோவிந்தன், பாரதிதாசனை கண்டித்ததோடு, ‘இனிமேல் எங்க வீட்டுக்கு வராதே’ எனக் கூறினார்களாம். 

இதனால், ஆத்திரமடைந்த பாரதிதாசன் 16-ம் தேதி மாலை கோவிந்தனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தான் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை கொண்டு அவரை சுட்டிருக்கிறார். சத்தம் கேட்டு ஓடி வந்த கலையம்மாளையும் திட்டி, துப்பாக்கியால் காலில் சுட்டிருக்கிறார். மேலும் கத்தியை கொண்டு இருவரையும் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். 

தம்பதியினரின் அலரல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலையில் 8 தையல் போடப்பட்ட நிலையிலும், இடது கன்னம், மார்பு ஆகியப் பகுதியில் பலத்த காயங்களுடன் இருந்த கோவிந்தன், உயர் சிகிச்சைக்காக சென்னை மியாட் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். காலில் குண்டு துலைத்த காயம், கையில் வெட்டு காயத்துடன் கலையம்மாள் சிகிச்சைப் பெற்று வருகிறார். 

இது குறித்த புகாரின் பேரில் விசாரணையில் இறங்கிய கண்டாச்சிபுரம் போலீசார், காப்புக் காட்டின் உள்ளே தப்பிச்சென்ற பாரதிதாசனை பிடிப்பதற்காக, வனத்துறை அதிகாரிகளுடன் சென்றிருக்கின்றனர். அப்போது, ‘மின்கம்பியை அறுத்து போட்டிருக்கிறேன். அதையும் மீறி யாராவது மேலே வந்தால் துப்பாக்கியால் சுட்டுவிடுவேன்’ என்று பாறை மீது நின்று பாரதிதாசன், போலீசாருக்கு மிரட்டல் விடுத்திருக்கிறார். 

இந்த நிலையில், நேற்றைய தினம் பாரதிதாசனை கண்டாச்சிபுரம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், இப்போதைக்கு மகள் படித்து வருகிறாள். அவள் படிப்பு முடிந்ததும் உனக்கு கட்டி வைக்கிறேன் என்று ஆசைவார்த்தை கூறி வந்தார்கள். கோவிந்தன் மகளுடன் பிரச்னை ஏற்பட்டதால் என்னை திட்டி அனுப்பிய மறுநாள், மீண்டும் வீட்டிற்குச் சென்றேன். கோவிந்தனிடம், நான் உங்களது வீட்டை விட்டுப் போய் விடுகிறேன். உங்களது மகளை மட்டும் எனக்கு கட்டிக் கொடுங்கள் எனக் கேட்டேன். அப்போது, 'நீ ஒரு அனாதை பையன் டா... உனக்கு என் பெண்ணை தரமாட்டேன்' என்று கூறினார். அதனால் வாக்குவாதம் ஏற்பட்டு, பெண் தராத கோபத்திலும், நம்மை எடுத்து வளர்த்தவர்களே இப்படி விட்டு விட்டார்களே என்ற கோபத்திலும்தான் சுட்டுவிட்டேன் என்று கூறினார்.

இதையடுத்து, பாரதிதாசன் பயன்படுத்திய துப்பாக்கி, கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது 294 (b), 324, 307 உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம், விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.