பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. உடல் சிதறி ஒருவர் பலி!

 

சாத்தூர் அருகே பனையப்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மற்றும் சிவகாசி பகுதிகளில் அவ்வப்போது பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து சம்பவங்களும், அதனால் உயிரிழப்புகளும் தொடர்கதையாகி வருகிறது. அண்மையில் இதுபோன்ற பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்திருந்த நிலையில், தற்போது விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பனையப்பட்டி பகுதியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பனையடிப்பட்டி கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் கண்டியாபுரம் பகுதியைச் சேர்ந்த சண்முகராஜ் வேலை செய்து வந்தார். வழக்கம் போல சண்முகராஜ் மற்றும் ஊழியர்கள்  பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டு அங்கிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியுள்ளன. இந்த விபத்தில் சண்முகராஜ் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக உடனே போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் வெடி மருந்து கலக்கும்போது வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வெம்பக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.