அரசுப் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. 4 பேர் பலி.. முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி!

 

நாகர்கோவில் அருகே அரசுப் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், காரில் பயணம் செய்த 12 பேரில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரியை சேர்ந்த பிரபல ஆடல், பாடல் குழுவினர்கள் திருச்செந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக திருச்செந்தூர் வந்திருந்தனர். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு ஒரு காரில் கன்னியாகுமரி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அந்த காரில் ஓட்டுநர் உட்பட மொத்தம் 12 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், நாகர்கோவில் அருகே வெள்ளமடம் பகுதியில் கார் வந்துகொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த அரசு பேருந்து மீது பயங்கர வேகத்தில் மோதியது. இந்த விபத்தில் அந்த கார் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில், அதில் பயணம் செய்த ஓட்டுநர் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், இந்த விபத்தில் பயணித்த அனைவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில், சிலர் கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் சாலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் மற்றும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆற்தலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்ச ரூபாயும், படுகாயமடைந்த தீவிர சிகிச்சை பெற்று வரும் 6 நபர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.” என்று கூறப்பட்டுள்ளது.