நடுரோட்டில் பெட்ரோலை தலையில் ஊற்றி தீக்குளித்த கல்லூரி மாணவி.. சென்னையில் பரபரப்பு!
சென்னை அடையாறில் நடுரோட்டில் மாணவி ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியைச் சேர்ந்தவர் ஞான குருநாதன். இவரது மகள் சண்முகேஸ்வரி (18). இவர் காரைக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி பயோடெக்னாலஜி 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மாணவியை கல்லூரி சார்பில் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு 15 நாட்கள் இன்டர்ன்ஷிப் பயிற்சிக்காக அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து அந்த மாணவி அடையார் இந்திரா நகரில் உறவினர் வீட்டில் தங்கி கடந்த 15 நாட்களாக பயிற்சிக்கு சென்று வந்தார். நேற்றுடன் இன்டென்ஷிப் பயிற்சி முடிந்ததை அடுத்து மாணவியின் தந்தை ஞான குருநாதன் அவரை அழைத்துச் செல்வதற்காக நேற்று அடையார் வந்தார். இன்று மாலை ஞான குருநாதன் தனது மகளை காரைக்குடி அழைத்து செல்வதற்காக தயாராகி காத்திருந்தார்.
அப்போது கோடம்பாக்கத்தில் இருந்து அடையார் வந்த மாணவி, அந்த பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் அரை லிட்டர் பெட்ரோலை பிளாஸ்டிக் பாட்டிலில் வாங்கி கொண்டு சிறிது தூரம் வந்தவுடன் பெட்ரோலை தலையில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனே தீயை அணைத்து மாணவியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். காயமடைந்த மாணவி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
பின்னர் இச்சம்பவம் குறித்து அடையாறு போலீசார் வழக்குப் பதிவு செய்து மாணவி தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நடுரோட்டில் மாணவி ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.