கல்லூரி மாணவி மீது விரைவு ரயில் மோதி பலி... செல்போனால் நேர்ந்த விபரீதம்!!

 

செல்போனில் பேசியபடி தண்டவாளத்தைக் கடக்க முயன்ற கல்லூரி மாணவி மீது ரயில் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரியில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைகழகத்தில் 3-ம் ஆண்டு படித்து வந்தவர் மாணவி கிருத்திகா. இவர் சென்னை, தாம்பரம் அருகே புதிய பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர். வழக்கம் போல் கல்லூரி முடிந்த நிலையில் நேற்று மாலை வீடு திரும்ப பொத்தேரி ரயில் நிலையம் வந்துள்ளார்.

அப்போது சென்னை, எழுப்பூரில் இருந்து தாம்பரம் வழியாக காரைக்குடி செல்லும் விரைவு ரயில் கல்லூரி மாணவி கிருத்திகா மீது மோதியது. இதில் கிருத்திகா தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாம்பரம் ரயில்வே போலீசார், உயிரிழந்த கல்லூரி மாணவி கிருத்திகாவின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், தனியார் கல்லூரி மாணவி கிருத்திகா பொத்தேரி ரயில் நிலையத்தில் செல்போனில் பேசியபடி ரயில் வருவதைக் கவனிக்காமல் தண்டவாளம் கடக்க முயன்ற போது ரயில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிய வந்துள்ளது. மாணவி கிருத்திகா படிப்பில் மிகவும் ஆர்வமுடையவர் என்றும் தங்களது ஒரே மகளே இழந்துள்ளதாக மாணவியின் பெற்றோர் கதறி அழுதது அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது.

கல்லூரி மாணவ, மாணவியர்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் பொத்தேரி ரயில் நிலையத்தில் முறையான போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும் என்றும், ஆபத்தை உணராமல் மாணவர்கள் பல விளையாட்டுத்தனமாக இருப்பதால் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விரைவு ரயில் மோதி கல்லூரி மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.