12-ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு போலி மருத்துவம் பார்த்த மோசடி தம்பதி.. தர்மபுரியில் பரபரப்பு!

 

தர்மபுரியில் 12-ம் வகுப்பு வரை படித்து விட்டு மருத்துவம் பார்க்கும் போலி மருத்துவம் தம்பதியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தர்மபுரி நகரின் பேருந்து நிலையத்தின் பின்புறத்தில் உள்ள குப்பாண்டி தெருவில் தனபால் கிளினிக் செயல்பட்டு வருகிறது. இதில் அன்பழகன் (60) என்பவர் 12-ம் வகுப்பு வரை படித்துள்ளார். இவரது மனைவி ஜெயந்தி (54) ஆகிய இருவரும் இணைந்து கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கிளினிக்கை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இவர்கள் போலி மருத்துவர்கள் என கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவத் துறை சார்பில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு அபராதமும் விதிக்கபட்டது. இதனையடுத்து தற்போது பல் மருத்துவம் படித்துள்ள பாரதி பிரியை (37) என்ற பெண் பெயரில் தனபால், மீண்டும் கிளினிக் நடத்தி வருகிறார். இதில் பல் மருத்துவர் மற்றும் பொது மருத்துவர் என பெயர் பலகை வைத்து கொண்டு மருத்துவம் பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில், இங்கு வரும் நோயாளிகளுக்கு அன்பழகன் மற்றும் அவரது மனைவி ஜெயந்தி இருவருமே ஊசி போடுவது, மருந்து மற்றும் மாத்திரைகள் வழங்குவது என மருத்துவம் பார்த்து வருகின்றனர். மேலும், இங்கே மருந்தகமும் செயல்பட்டு வருகிறது.

தர்மபுரி நகரின் மைய பகுதியில் 12ம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு மருத்துவம் பார்க்கும், தம்பதியினரின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எனவே மருத்துவம் பார்க்கும் போலி மருத்துவர்கள் மீது அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு மருத்துவத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தர்மபுரி மாவட்ட மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இணைய இயக்குநர் டாக்டர் சாந்தியிடம் கேட்டபோது, குப்பாண்டி தெருவில் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்து, உண்மையை கண்டறிந்து போலி மருத்துவர்கள் என தெரிய வந்தால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.