பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு Z பிரிவு பாதுகாப்பு... ஒன்றிய உள்துறை அமைச்சகம் தகவல்

 

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு Z பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட உள்ளது என ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாஜகவில் இணைந்த அண்ணாமலை, கடந்தாண்டு தமிழ்நாடு பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். தமிழ்நாட்டில் பாஜகவை வளர்ப்பதில் தீவிரம் காட்டி வரும் அண்ணாமலை, ஆளும் திமுக அரசுக்கு எதிராக தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

இதனிடையே ஒன்றிய உளவுத்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கடந்த 2 நாட்களாக தமிழ்நாட்டில் முகாமிட்டு அண்ணாமலைக்கு கொடுக்கப்படும் பாதுகாப்பு குறித்தும் அவரது வீடு, தங்கும் இடங்களில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் பற்றியும் ஆய்வு செய்துள்ளனர்.

அதில், மதவாதிகள், பிரிவினைவாதிகள் உள்ளிட்ட தரப்பில் இருந்தும் மற்ற இடங்களில் இருந்தும் அண்ணாமலையின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதை ஒன்றிய உளவுத்துறையினர் கண்டறிந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் 20-க்கும் மேற்பட்ட கமாண்டோக்கள் சுழற்சி முறையில் அண்ணாமலைக்கு பாதுகாப்பு அளிக்கவுள்ளனர் எனவும் அண்ணாமலை வீடு, அவர் தங்கும், செல்லும் இடங்களில் 24 மணி நேரமும் கமாண்டோ வீரர்கள் பாதுகாப்பு தருவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

மாவோஸ்டுகளிடமிருந்தும் மத தீவிரவாதிகளிடமிருந்தும் இவருக்கு மிரட்டல் வந்ததால் இந்த பாதுகாப்பு வழங்கி இருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இரண்டு நாட்களாக மத்திய உள்துறையை சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள் அண்ணாமலை வீடு உள்ளிட்ட இடங்களில் வந்து சோதனை செய்து சென்றுள்ளனர். இதற்கான ஓப்புதல் கையெழுத்தும் அண்ணாமலையிடம் பெறப்பட்டுள்ளது.