நெய்வேலி சுரங்கத்தில் வேன்-லாரி நேருக்கு நேர் மோதல்!! 13 பேர் படுகாயம்

 

நெய்வேலி இரண்டாவது சுரங்கத்தில் வேன் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 13 தொழிலாளர்கள் காயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் சுரங்கங்களும், மின் சக்தி ஆலைகளும் அமைந்துள்ளன. தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி மற்றும் பல மாநிலங்களுக்கு இங்கிருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்த நிறுவனத்தின் இரண்டாவது சுரங்கத்தில் தனியார் காண்ட்ராக்ட் நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 13 பேர் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் நெய்வேலி என்எல்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதில் நான்கு பேரின் நிலமை மோசமானதை தொடர்ந்து புதுச்சேரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர். சுரங்கப் பணிக்காக லாரியில் ஆட்களை ஏற்றிக்கொண்டு சுரங்கத்தினுள் சென்றபொது சுரங்கத்திலிருந்து மேலே வந்து கொண்டிருந்த டிப்பர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் காயம் அடைந்த தொழிலாளர்கள் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்து தொடர்பாக நெய்வேலி மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே என்.எல்.சி சுரங்கத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில் தற்போது நிகழ்ந்த இந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.