வைகோ ரீல் ஹீரோ அல்ல ரியல் ஹீரோ! முதல்வர் ஸ்டாலின் புகழாரம்..!

 

வைகோ ரீல் ஹீரோ அல்ல ரியல் ஹீரோ என முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழகத்தில் முக்கியமாக செயல்படும் அரசியல் கட்சியான மதிமுகவின் நிறுவனர் மற்றும் பொதுச் செயலாளர் வைகோ. இவர் 1964-ம் ஆண்டு, பேரறிஞர் அண்ணா முன்னிலையில் சென்னை கோகலே மன்றத்தில் இந்தி எதிர்ப்புக் கருத்தரங்கத்தில் முதன் முதலில் பேசி தனது அரசியல் வாழ்வில் அடி எடுத்து வைத்தார். அதன்பின் 1992-ம் ஆண்டு திமுக தலைவர் கருணாநிதியைக் கொலை செய்ய முயற்சித்தார் என்று கொலைப் பழி சுமத்தித் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.

பின்னர்  மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார். மூன்று முறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும், இரண்டு முறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதற்காக 2001-ல் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 19 மாதங்கள் சிறையிலிருந்தார்.

இந்த நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் நீண்ட நெடிய அரசியல் பயணத்தை விவரிக்கும் வகையில் 'மாமனிதன் வைகோ' என்ற ஆவணப்படம் தயாரிக்கப்பட்டது. மாமனிதன் வைகோ ஆவணப்படத்தை முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை ராயப்பேட்டை சத்யம் தியேட்டரில் நடந்த விழாவில் வெளியிட்டார்.

இந்த விழாவில் மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை.வைகோ, காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, விசிக தலைவர் திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, சிபிஐஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், முஸ்லீம் லீக் காதர் மொய்தீன், தவாக வேல்முருகன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், திரைப்படத்தில் வரும் ஹீரோக்கள் சித்தரிக்கப்பட்டவர்கள் என்றும் வைகோ சித்தரிக்கப்படாத ரியல் ஹீரோ என்றும் பெருமிதம் தெரிவித்தார். உயரத்தில் மட்டும் உயர்ந்தவர் அல்ல. லட்சியம், தியாகத்தில் உயர்ந்தவர் தான் வைகோ என்றும் குறிப்பிட்டார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட முதல்வர், உரை வீச்சால் அரசியலின் ஆழத்தையும் - நெடும்பயணங்களால் தமிழ்நாட்டையும் அளந்தவர் எனவும் 'திராவிடப் போர்வாள்' எனச் செருக்களத்தில் கொள்கைப் பகைவர் கூட்டத்தை எதிர்ப்பவர் எனவும் புகழாரம் சூடினார்.

மேலும் வைகோ அவர்களது வாழ்க்கைப் பயணத்தைத் திரையில் கண்டு மகிழ்ந்தேன் எனவும் வாழ்க அவரது தொண்டு, வெல்க திராவிடம் என தெரிவித்தார்.