நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கம் - போக்குவரத்து துறை அறிவிப்பு

 

தமிழ்நாடு முழுவதும் நாளை குரூப் 4 தேர்வை 22 லட்சம் பேர் எழுத உள்ளனர். காலை 9.30 மணிக்கு தொடங்கும் தேர்வு பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறுகிறது. இத்தேர்வு தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் 316 தாலுகாக்களில் நடைபெறுகிறது. மொத்தம் தேர்வு 7,689 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தேர்வின் பகுதி 1-ல் கட்டாய தமிழ் மொழி தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வில் 100 வினாக்கள் கேட்கப்படும். 150 மதிப்பெண்கள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் பகுதி 2-ல் பொது அறிவு தேர்வில் 100 வினாக்கள் கேட்கப்படும். அதன் மதிப்பெண் 150 மதிப்பெண்கள் ஆகும். ஆக மொத்தம் 200 கேள்விகளுக்கு மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

இந்நிலையில், மாநிலம் முழுவதும் சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் வழிகாட்டுதலின்படி தேர்வு மைய எண்ணிக்கைக்கு ஏற்ப சிறப்பு பேருந்துகளின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்கள் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது. மேலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதை போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கண்காணிப்பர் எனவும் போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.