சனி பகவானை தரிசிக்க வந்த சிறுமிக்கு நேர்ந்த துயரம்! பெற்றோர் கண்முன்னே நடந்த கொடூரம்!

 

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் குளத்தில் மூழ்கி, ஆந்திரா சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் திருப்பதி அருகே உள்ள கோரலுக்குண்டா பகுதியில் வசித்து வருபவர் சக்கரபாணி. ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு சுசீலா என்கிற மனைவியும், கீர்த்தனா (12). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் சக்கரபாணியின் உறவினா்கள், நண்பா்கள் உள்ளிட்ட 34 போ், 2 வாகனங்களில் திங்கள்கிழமை காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தனர்.

கோவிலுக்கு செல்வதற்கு முன்னதாக நள தீர்த்தத்தில் குளிப்பதற்காக நேற்று மாலை சக்கரபாணி, அவரது மனைவி சுசீலா மற்றும் மகள் கீர்த்தனா ஆகியோர் சென்றுள்ளனர். சிறுமி கீர்த்தனா குளத்தில் குளிப்பதற்காக இறங்கியபோது, படிகளில் எண்ணெய் மற்றும் பாசி படர்ந்து இருந்ததால், வழுக்கி குளத்துக்குள் விழுந்துள்ளார். 

இதை சற்றும் எதிர்பார்க்காத சிறுமியின் பெற்றோர் உடனே சிறுமியை மீட்க முற்பட்டனர். அதற்குள் சிறுமி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் திருநள்ளாறு காவல் ஆய்வாளர் அறிவுச்செல்வம் மற்றும் போலீசார் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து திருநள்ளாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயிலுக்கு ஆன்மிகப் பயணம் வந்த ஆந்திரக் குடும்பத்தினர் தங்கள் மகளை இழந்து கதறியது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.