சோகம்! சார்ஜ் போட்டுக்கொண்டே செல்போனில் அரட்டை... மத்திய அரசு அதிகாரி மின்சாரம் தாக்கி பலி!!

 

சார்ஜரோடு செல்போனில் பேசிய மத்திய அரசு பாதுகாப்பு துறை  ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கௌரி பேட்டை பகுதியில் வசித்து வந்தவர் பால்பாண்டி (58). ஆவடியில் உள்ள மத்திய அரசு நிறுவனமான சி.வி.ஆர்.டி.இ.யில் அதிகாரியாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி சாந்தி, திருநின்றவூர் அடுத்த பாக்கம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்கள், ஆவடி ஜே.பி.எஸ்டேட் 4-வது தெருவில் புதிதாக ஒரு வீடு வாங்கி உள்ளனர்.

அந்த வீட்டில் மறு சிறு அமைப்பு பணிகள் முடிவுற்ற  வர்ணம் பூசும் பணி செய்து வந்துள்ளார். இதற்கிடையில் கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிறுக்கிழமை அன்று பெயிண்ட் வேலை செய்ய வேலையாட்கள் யாரும் வராத நிலையில் பால்பாண்டி  தனியாக வீட்டில் வர்ணம் பூசிவந்துள்ளார். அதன்பிறகு அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. 

பால்பாண்டி வீட்டிலிருந்து வெளியே சென்றால் புதிதாக வாங்கி உள்ள வீட்டிலோ அல்லது அருகில் உள்ள உறவினர்கள் வீட்டிலோ தங்கி விடுவது வழக்கம். இதனால் பால்பாண்டி வீட்டுக்கு வராததை அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் கண்டுகொள்ளவில்லை என தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று காலை புதிதாக வாங்கி உள்ள வீட்டின் வராண்டாவில் பால்பாண்டி இடுப்பில் ஈர துண்டை கட்டிய நிலையில், முகம் கருத்து, உடலில் கொப்புளங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் ஆவடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பால்பாண்டி உடலுக்கு அருகில் செல்போன் மற்றும் சார்ஜர் வயர் தொங்கியபடி இருந்தது. எனவே இடுப்பில் ஈரத்துண்டுடன், சார்ஜ் போட்டபடி செல்போனில் பேசிய பால்பாண்டி மின்சாரம் தாக்கி இறந்து இருக்கலாம் என தெரிகிறது. 

பால்பாண்டி உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த போலீசார், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே பால்பாண்டி மின்சாரம் தாக்கி இறந்தாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதும் காரணமா? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.