தெம்மா தெம்மா பாடல்... தூத்துக்குடி 2கே கிட்ஸ் அட்ராசிட்டி... வார்னிங் கொடுத்த காவல்துறை!

 

தூத்துக்குடியில் ‘நம்ம தூத்துக்குடி’ என்ற வாசக செல்ஃபி பாயிண்ட்டில் தெம்மா தெம்மா பாடலுக்கு ஆபாசமாக நடனமாடி இணையத்தில் வைரலாகி வருகிறது.

டிக்டாக், ரீல்ஸ், ஷார்ட்ஸ் வருகைக்கு பிறகு இந்த டிரெண்டிங் கலாச்சாரம் அனைவரிடமும் பரவி உள்ளது. வாரா வாரம் புதிதாக ஏதாவது ஒரு விஷயம் இணையதளத்தில் டிரெண்டாகி அதை பிரபலங்கள் தொடங்கி பொதுமக்கள் வரை செய்து வீடியோ வெளியிடுவது வாடிக்கையாகி இருக்கிறது.

அந்த வகையில் கடந்த சில நாட்களாக மலையாள திரைப்படமான ரெயின் ரெயின் கம் எகெயினில் வரும் தெம்மா தெம்மா பாடல் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி உள்ளது. மலையாளத்தில் பிரபலமான இந்த பாடலுக்கு கேரளாவை சேர்ந்த கல்லூரி மாணவிகள் நடனமாடினர். முகம் சுளிக்க வைக்கும் ஸ்டெப்புகளை கொண்ட கேரள மாணவிகளின் நடனம் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டது. 

ஒரு பக்கம் இதற்கு கடும் எதிர்ப்புகள் சமூக வலைதளங்களில் எழுந்தாலும் இந்திய அளவில் ஏராளமானோர் இதே ஸ்டெப்புகளுடன் பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில், தூத்துக்குடியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 11 பேர் பொது இடத்தில் வீடியோ செய்து வெளியிட்டுள்ளனர்.

தூத்துக்குடியில் ஜெயராஜ் சாலையில் மாநகராட்சி சார்பில் நம்ம தூத்துக்குடி என்ற வாசகம் அடங்கிய செல்பி பாயிண்டில் உள்ள எழுத்துக்களின் மீது 11 கல்லூரி மாணவர்கள் ஏறி அமர்ந்து கேரள மாணவிகள் தெம்மா தெம்மா பாடலுக்கு ஆடியதை போன்ற அதே முகம் சுளிக்க வைக்கும் ஸ்டெப்புகளுடன் நடனமாடினர்.

இதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் அவர்களே வெளியிட அது வேகமாக பரவியது. அதே வேகத்தில் பிரச்சனையும் அவர்களை தேடி வந்தது. 11 மாணவர்களும் பொது இடத்தில் எப்படி இதுபோல் நடனமாடுவது என்று பலரும் கேள்வி எழுப்பினர். அதேபோல், தூத்துக்குடியை அவமதிக்கும் வகையில் இந்த இளைஞர்களின் செயல் உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது.

இதையடுத்து, அவர்களை போலீசார் பிடித்து மாணவர்கள் என்பதால் போதிய அறிவுரை வழங்கி “செல்பி பாயிண்ட் முன்பு நின்று இனி இதுபோன்று தவறு செய்ய மாட்டேன்” என்ற உறுதிமொழி ஏற்க வைத்து மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு விடுவித்தனர்.

இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் இந்த வீடியோவை பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்த மாணவர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். போலீசாரின் இந்த விசாரணை “தெம்மா தெம்மா” பாடலுக்கு ரிலீஸ் வெளியிட்ட மாணவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.