உயிர் பலி வாங்கிய வடிகால் வாய்க்கால்! வீட்டு வாசலில் விளையாடிய சிறுமிக்கு நேர்ந்த சோகம்!!

 

சீர்காழி அருகே வாய்க்காலில் விழுந்து 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சீர்காழியில் 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிக மழை பெய்துள்ளது. தொடர் மழையால் ஆயிரக்கணக்கான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல கிராமங்கள் தனித் தீவாக காட்சியளிக்கின்றன. மழை நீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா எருக்கூர் வடக்கு தெருவில் வசித்து வருபவர் ராமன். இவரது மனைவி சங்கீதா. இந்த தம்பதிக்கு அக்ஷிதா (5) என்ற மகள் உள்ளார். ராமன் வெளிநாட்டில் கேட்டரிங் தொழில் செய்து வருவதால், வீட்டில் அவரது மனைவி மற்றும் மகள் மட்டும் இருந்துள்ளனர். 

கடந்த சில நாட்களாக கன மழை பெய்ததால் வீட்டை விட்டு வெளியே வராத சிறுமி மழை விட்ட நிலையில்  வீட்டின் அருகே விளையாடி உள்ளார். பின்னர் அவரைக் காணவில்லை. தாய் சங்கீதா மற்றும் உறவினர்கள் நீண்ட நேரம் தேடிய நிலையில் அருகில் இருந்த வாய்க்காலில் சிறுமி அக்ஷிதா இறந்த நிலையில் மிதந்துள்ளார். 

விளையாடும் போது சிறுமி தவறி வாய்க்கால் விழுந்து, பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொள்ளிடம் போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.